நமசிவாயத் திருப்பதிகம்


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைத்தொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே


பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
வினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே

இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே

வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே 6
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே 7

இஇல்லக விளக்கது இஇருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே 8

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே 9

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே

 

திரு அங்கமாலை
தலையே நீ வணங்காய் - தலை
மாலைதலைத் தணிந்து
தலையாலேபலி தேருந்தலைவனைத்
தலையே நீ வணங்காய்

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்டோள் வீசி நின்றாடும் பிராந்தன்னைக்
கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ - சிவ
னெம்மிறை செம்பவள
எரிபோல்மேனிப் பிரான்றிறமெப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ

மூக்கே நீ முகராய் -முது
காடுறை முக்கண்ணனை
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை
மூக்கே நீ முகராய்

வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானையுரி போர்த்துப்
பேய்வாழ்காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்

நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடுமலை மங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
கைகாள் கூப்பித் தொழீர்-கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனை
கைகாள் கூப்பித் தொழீர்

ஆக்கையாற் பயனென் - அரன்
கோயில்வலம் வந்து
பூக்கையாலட்டிப் போற்றியென்னாதவிவ்
ஆக்கையாற் பயனென்

கால்களாற் பயனென் - கறைக்
கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக்
கால்களாற் பயனென்

உற்றாரா ருளரோ - வுயிர்
கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறைகூத்தனல்லானமக்
குற்றாரா ருளரோ

இறுமாந் திருப்பன்கொலோ - வீசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ் சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலே

தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்

குங்கும பஞ்சதசி


குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
குங்குமமாவது குடியினைக் காப்பது
குங்குமமாவது குணமத ளிப்பது
குங்குமமாவது கொல்வினைத் தீர்ப்பதே

விதிகளை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிகளை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவ்ரதை குங்குமம்
கதிகளை ஆள்வதும் குங்குமமாமே

தஞ்சமென்றோரைத் தடுத்தாட்கொள்வதும்
பஞ்சமா பாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேருக்கு அபய மளிப்பதும்
காஞ்சி காமாக்ஷ¢யின் குங்குமமாமே.

நற்பதமீவது நாரணீ குங்குமம்
பொற்பினை ஈவது புரணீ குங்குமம்
சிற்பரமாவது ஸ்ரீ சக்ர குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்குமமாமே

செஞ்சுடர் போன்றது சீரான குங்குமம்
கொஞ்சும் அழகைக் கொடுப்பது குங்குமம்
ஐந்து புலன்களை அடக்கி யருள்வதும்
காசி விசாலாக்ஷ¢யின் குங்குமமாமே.

நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே

சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்குமமாமே

நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும்
செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
மதுரை மீனாக்ஷ¢யின் குங்குமமாமே சிவசிவ என்றுமே திருநீறணிந்தபின்
சிவகாமியே எனச் சிந்தித் தணிவதும்
தவமான மேலோருந் தரித்துக் களிப்பதும்
பலவினை தீர்ப்பதும் குங்குமமாமே

எவையெவை கருதிடின் அவையவை யீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்கு
குவிநிதி யீவதும் குங்குமமாமே

அஷ்டலெக்ஷ்மி அருள் தந்தளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டம் தவிர்த்தென்னைக் காத்தருள்வதும்
சிஷ்டனாய்ச் செய்வதும் குங்குமமாமே

குஷ்டமுதலான மகாரோகந் தீர்ப்பதும்
நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
கிட்டவே செய்வதும் குங்குமமாமே

பட்ட காலிலே படுமெனக் கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணிந்தே
இட்டார் இடர்தவிர்த்த குங்குமமாமே

சித்தந்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
எத்துந் தெரியாதே ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழும் அன்னை குங்குமம்
நித்தியம் தரித்துமே மேன்மை யடைவீரே.

மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகள்
செஞ்சுடர் ஆகுமோர் ஸ்ரீசக்கர லலிதை
கஞ்சமலர் முகம் தன்னில் திகழ்வதும்
பஞ்ச நிதிதரும் குங்குமமாமே.